புத்தாண்டு

சென்ற ஆண்டு
விடுத்த சபதம்
கனவாகிப் போகும்...!!!
ஓர் ஆண்டாய்த்
தொடுத்த கனவு
சபதமாய் ஆகும்....!!!

தேடாததைத் தேடுகிறேன்

நான்
பருவம் கொண்ட பின்னும்
தேடாதக் காதலை
என் ப்ரசனத்திலும்
அவள் பிறன் மனம்
நாடியத் தனிமையினால்
தேடுகிறேன்....!!!!

பொருத்தம்

பிறந்தநாள் அன்றி
சத்தியமாய்
வேறெதுவும்

பொருந்துவதாய்
இல்லை
எனக்கும்
ஏசுவிற்கும்...! :)

என்ன தான் கிழிச்ச...?

அப்பாவின்
கோபத்தின்
அடுத்தக் கேள்வியைச்
சரியாக யூகித்து
அவசர அவசரமாய்க்
கிழித்தேன்
பல மாதங்களாய்க்
கிழிக்காமல்
விட்டுப் போன
நாட்காட்டியை....!

மழை


வனாந்திரம் முழுமைக்கும்
எப்படி நான்
குடை பிடிப்பேன்....?
நீ நடந்தச்
சுவடுகள் தேடி
அள்ளிச் சென்றது
மழை....!

சிலேடை

நான் ஒன்றாய்ச் சொன்னது
உனக்கு மட்டும்
வேறாய்ப் புரிந்தது
என் மொழிதலிலும்
சிலேடை உண்டென்பதை
உணர்த்திடவா....?!

கன்னிக் கவிதை


என் ஒன்பதாம் அகவையில்
நான் கிறுக்கியக்
கன்னிக் கவிதையை
இன்று சபிக்கிறேன்...
அது உன்னைக் கண்டதினால்
பிறந்ததாய் இருந்திருக்காதா
என்ற ஏக்கத்தில்....

பாரதி


அச்சம் இல் என்றுச் சொன்னாய்
அதன் தாக்கம் உணர்த்திட
புவி வான் அதிரச் சொன்னாய்....

மிச்சம் எடுத்துக் கொண்டோம்
எங்கள் அச்சம் மறந்துப்
பழி பாவங்கள் கொண்டோம்....!

அக்னிக் குஞ்சொன்றுக் கண்டாய்
அதன் ஆக்கம் உணர்த்திட
காடு தகித்ததென்றாய்....

இங்கேயும் கனலாகும் காடு
எங்கள் நெஞ்சத்தில் எரிகின்ற
பொல்லாத வஞ்சத்தில்....!

உந்தன் காலத்தின் மறைவிற்குள்
தமிழ் எழுத்தினால் எழுதிட
எதைத் தான் மறந்தாய்....

உன்னைக் காலனும் எடுத்தப்பின்
இந்தக் காலத்தின் ஓட்டத்தில்
நாங்கள் உனையே மறந்தோம்....!

களவு


கண்ணெதிரே
களவு நடந்தும்
என் பணத்தைச்
சரி பார்த்துக் கொண்டு
கனவுப் போல்
கலையாதிருந்தேன்....
அவன் பணத்தின்
கணத்தோடு
என் மனித நேயமும்
திருடு போனது
புரியாமல்....


அணை

அணைக்கத் துடித்த
நிலமகன் ஏங்க...
இணையத் தவிக்கும்
நதி இவள் தேங்க...
பிரித்தாண்டிடும்
மனிதனின் நெஞ்சம்...
அணையென மாறித்
தடுத்தாண்டதே வஞ்சம்...!

எதுவும் இல்லாமலும்....

அரசாணைக் கோப்புகள் இல்லை
அதிகாரிகள் கையொப்பம் இல்லை
தனி நிதி ஒதுக்கீடும் இல்லை
ஆயினும் சென்னையில்
ஒரே நாள் மழை வரத்தால்
அத்தனைப் பேருந்துகளும்
மிதவைப் பேருந்துகளாய்....!!!

தேடல்...

உன்னை
நான்
எங்கெங்கோ
தேடித் தொலைகிறேன்...!!
நீ
வேறிடம்
தேடித் தொலைவதுத்
தெரிந்தும்
தெரியாதவளாய்....

உணர்வோமா...?!

புவி வாழும்
இறுதி மரத்தின்
ஒரே இலையும்
உதிரும் பொழுதேனும்
உணர்வோமா...?!
உயிர் வாழக்
காந்திக்காகிதம் மட்டுமே
போதாதென்பதை...

அதனால் என்ன...?!


உன் நேசம்
மரித்ததாய்
நீ உரைத்தப்
பொழுதிலும்
என் உதடுகள்
முனுமுனுத்ததென்னவோ

'அதனால் என்ன...?!
உனக்கும் சேர்த்து
நானே
நேசித்துவிட்டுப்
போகிறேன்....'

தெரிந்திருந்தால்...


அன்பு கொள்வதால்
இத்தனைத் துன்பமா?
தெரிந்திருந்தால்
ரௌத்திரமே பழகியிருப்பேன்....

கைக் கோர்க்கையில்...

உன் நட்பில் இணைவதாய் எண்ணி
கைக் கோர்த்திட முயன்றேன்...
விரல் வேர்ப்பதாய்க் கூறி
பிடி தளர்த்திச் சென்றாய்...
தேடல் தொடங்கிய நானே
தொலைந்தவளாகியும் போனேன்...

தோள் சாய்ந்திடு

என் உயிர்
உடல் பிரியும் வேளையில்
உன் விழி
நீர் சொரியும் நொடியினில்
என் தோள் மீது
உன் தலை சாய்த்திடு
அந்த கணத்திலேனும்
உன் தீண்டலும்...
என் தேடலும்...
நம் தோழமையும்...
முழுமைப் பெற்றதாய்
என் ஆன்மா சில்லிடட்டும்...

தேர்தல்

இரங்கல் கூட்டத்தில்
அழுகை தான் அழகென்றால்
நானும் அழுகிறேன்...
இங்கே நேர்மை உண்மை நியாயம்
அத்தனையும் இறந்திருக்கிறதே
நான் ஒருத்தியேனும் அழுதாகத்தான் வேண்டும்....!!!

ரயிலும் நாமும்...

நம் உறவும்
ரயில்பெட்டிப் போல் தான்
நான் உன் புறம் நோக்கி...
நீ முன் புறம் நோக்கி...
ஆம்..! காதலைப் போல்
நட்பும் கொடியது தான்
ஒருவகையாய்
ஒருதலையாய்
ஆன பட்சத்தில்....

உணர்வுகள் மறந்தோம்...


சினம் விடுத்த வார்த்தைகள்
மனம் மறந்தப் பின்னும்
நம் நேசம் வளர்த்த உணர்வுகள்
ஏன் விலக்கிப் போனோம்...?

விட்டில் பூச்சிகள்

பளபளப்பாய் முகம் பிரதிபலித்தும்
துளி நீரற்று வரண்டுப் போன
காலிக் குடங்களும்....


தொடர்பு கொள்ள இணைப்பு இருந்தும்
இயக்கம் கொள்ள மின் அற்ற
தொலைக்காட்சிப் பெட்டியும்....


ஐந்தின் பின் இரு சுழி இருந்தும்
பருப்பின் முன் மதிப்பற்றுப் போன
காந்திக் காகிதமும்.....

வாக்காளனை நோக்கி
ஒருசேர உரக்க உரைத்தது
'விளக்கில் வீழும் விட்டில் பூச்சிகளா...' என்று

இங்கேயும் உண்டு...

கிழிந்தச் சட்டைகளும்
தொலைந்த ஒற்றைக் காலணியும் இருப்பது
கூடாரத்தில் மட்டுமல்ல
கோட்டையிலும் தான்...

கண்ணா.....


உடல் இங்கு உயிர் கொண்டதேனோ...
கண்ணன் விரல் மீட்டும் குழலாக மாறேனோ....
விழி இங்கு ஒளி கொண்டதேனோ....
கண்ணன் தோள் சேரும் பூமாலை ஆவேனோ....

அப்படி என்ன காதல்...?!?!?!

முகிலே....!
விட்டுப் பிரிந்தோடும்
கதிரின் மீது
அப்படி என்ன
காதல் உனக்கு....?!?!?!
பிறர் கண்படுமோ என
முகம் மறைத்துச் செல்கிறாய்...?!?!?!

உணர்வுகள்

வார்த்தைகள் உரைக்காமல் முடக்கப்படலாம்...
பார்வைகள் இமைகளால் மறைக்கப்படலாம்...
உணர்ச்சிகள் வெளிப்படாமல் ஒடுக்கப்படலாம்...
ஆனால் உணர்வுகள்........
உணர்வுகளாய் நான்......

ஆறில் மூன்று....


ஏன் பூக்களெல்லாம் இன்று
அழகாய் இதழ் மலர்கின்றன...?
ஓ...!!!
மலர்களின் ராணி இன்று தான்
ஜனித்தாள் என்பதாலா.....?!

தொடு வானம்

நீர் கோர்த்த விழியோடு நானும்
துடைத்தெறியும் விரலோடு நீயும்
தொடும் தூரம் தொலைவானம் தானோ
வான் தொடஏங்கும் கடலலையும் நானோ

உனக்காக...


என் ஒவ்வொரு பிறப்பிலும்
நீ எனக்குக் கிடைப்பாய் எனில்
நொடிக்கொரு தரம்
இறந்துப் பிறக்கவும் நான் தயார்

ஏன் மறந்தாய் ?


ஏன் மறந்தாய்.....?
என்னில் முதல் தடுமாற்றம்
என் தமிழில் முதல் வரிச்சேதம்

அவள்....!!!


அவள்....!!!
நான் தினம் தினம்
என் எழுத்துக்களால் வடிக்க முயன்றும்
என்னைத் தோற்கடிக்கும்
என் அழகான தேவதை....!

நிலா....


நிலவே....!
நான் துயில
ஊஞ்சல் வேண்டுமென்றா
நீ தினம்
பிறையெனத் தேய்கிறாய்....???

காத்திருந்த நொடிகள்...


நாட்கள் கடந்தது ஒருவழியாய்
நொடிகள் கடத்துதல் தான் தவமாய்
உன்முகம் தன்னை நோக்குதல் யுகக்கனவாய்
என் விழி நோக்கி வழிகளும் தேயந்ததுவா.....

புன்னகை :)

வானவில் நிமிர்ந்து ஊஞ்சலாகும்
நிலவும் தேய் பிறை இன்றி வாழும்

பூக்களின் வாழ்நாள் நீண்டு கூடும்
வாளின் கூர் முனை அற்று வீழும்
ஆதலின் புன்னகையால் போர் செய்க..... :)

ஒரே பார்வை...


பத்தே நொடி
நீ தொடுத்த கூரிய விழி
சில நொடியில் செத்தேனடி
விழித்தெழ ஏது வழி....