புத்தாண்டு

சென்ற ஆண்டு
விடுத்த சபதம்
கனவாகிப் போகும்...!!!
ஓர் ஆண்டாய்த்
தொடுத்த கனவு
சபதமாய் ஆகும்....!!!

தேடாததைத் தேடுகிறேன்

நான்
பருவம் கொண்ட பின்னும்
தேடாதக் காதலை
என் ப்ரசனத்திலும்
அவள் பிறன் மனம்
நாடியத் தனிமையினால்
தேடுகிறேன்....!!!!

பொருத்தம்

பிறந்தநாள் அன்றி
சத்தியமாய்
வேறெதுவும்

பொருந்துவதாய்
இல்லை
எனக்கும்
ஏசுவிற்கும்...! :)

என்ன தான் கிழிச்ச...?

அப்பாவின்
கோபத்தின்
அடுத்தக் கேள்வியைச்
சரியாக யூகித்து
அவசர அவசரமாய்க்
கிழித்தேன்
பல மாதங்களாய்க்
கிழிக்காமல்
விட்டுப் போன
நாட்காட்டியை....!

மழை


வனாந்திரம் முழுமைக்கும்
எப்படி நான்
குடை பிடிப்பேன்....?
நீ நடந்தச்
சுவடுகள் தேடி
அள்ளிச் சென்றது
மழை....!

சிலேடை

நான் ஒன்றாய்ச் சொன்னது
உனக்கு மட்டும்
வேறாய்ப் புரிந்தது
என் மொழிதலிலும்
சிலேடை உண்டென்பதை
உணர்த்திடவா....?!

கன்னிக் கவிதை


என் ஒன்பதாம் அகவையில்
நான் கிறுக்கியக்
கன்னிக் கவிதையை
இன்று சபிக்கிறேன்...
அது உன்னைக் கண்டதினால்
பிறந்ததாய் இருந்திருக்காதா
என்ற ஏக்கத்தில்....

பாரதி


அச்சம் இல் என்றுச் சொன்னாய்
அதன் தாக்கம் உணர்த்திட
புவி வான் அதிரச் சொன்னாய்....

மிச்சம் எடுத்துக் கொண்டோம்
எங்கள் அச்சம் மறந்துப்
பழி பாவங்கள் கொண்டோம்....!

அக்னிக் குஞ்சொன்றுக் கண்டாய்
அதன் ஆக்கம் உணர்த்திட
காடு தகித்ததென்றாய்....

இங்கேயும் கனலாகும் காடு
எங்கள் நெஞ்சத்தில் எரிகின்ற
பொல்லாத வஞ்சத்தில்....!

உந்தன் காலத்தின் மறைவிற்குள்
தமிழ் எழுத்தினால் எழுதிட
எதைத் தான் மறந்தாய்....

உன்னைக் காலனும் எடுத்தப்பின்
இந்தக் காலத்தின் ஓட்டத்தில்
நாங்கள் உனையே மறந்தோம்....!

களவு


கண்ணெதிரே
களவு நடந்தும்
என் பணத்தைச்
சரி பார்த்துக் கொண்டு
கனவுப் போல்
கலையாதிருந்தேன்....
அவன் பணத்தின்
கணத்தோடு
என் மனித நேயமும்
திருடு போனது
புரியாமல்....