முடவன் நான்...!


கடலில் நீந்தியே
கரையைத் தேடும்
முடவன் போல்
நான் உன்னைத் தேடினேன்...
புயலாய் நீ என்னைப்
புரட்டியே போட்டிடினும்
இழந்துப் போக
கட்டுமரம் கூட இல்லை என்னிடம்...

மௌனம்



மடல் விரியும் சத்தம் கூட
உரக்க கேட்கும் தருணம்
அமைதி என்றும் கூறலாம்
அதுவே
மௌனம் என்றும் ஆகலாம்...

சிந்தனை




மென்று தின்று முடிக்கும் மணித்துளிக்குள்
அசை போட்டது மனது
சில பல வருடங்களையும்
ஒரு சில உணர்வுகளையும்...

கனவுடன் ஒரு உடன்படிக்கை

கண்ணுக்குத் தெரியாமல்
கள்ளனாய் உறவாடி...

நெஞ்சத்தின் நினைவுகள்
அறியாது களவாடி...

சிந்தையின் சிதறலாய்
சில பொழுதே வந்தோடும்
கனவே...

உன்னோடு சின்னதாய் ஓர் உடன்படிக்கை...
கையேடு ஏதுமில்லா ஒரு கனவு அறிக்கை...

எங்கேயும் திருடாமல்
எல்லைகள் மீறாமல்
விரல்கள் நீட்டிடினும்
மூக்கின் நுனி உரசாமல்...

உள்ளத்தின் உணர்வுகள் பகிர்கிறேன்...
என்னோடு உறவாட உன்னை விழிக்கிறேன்...

பள்ளியறை பாடம் தாண்டி
மரத்தடியை வருடி விட்டு....
இறுதி முகம் பார்த்த அந்த
கணக்குப் பரீட்சை மறைத்துவிடு...

நேசமுகம் காட்டும் அந்த
குட்டி சண்டை காட்டி விட்டு...
எங்கேயேனும் காண ஏங்கும்
ஏக்கங்கள் தவிர்த்து விடு....

கல்லூரி சாலை நிறையும்
பூவிதழ்கள் நுகர்ந்து விட்டு...
பாதங்கள் பட்டு வந்த
சுவடுகள் அழித்து விடு...

கூடி பேசி சிரித்து சிலிர்த்த
நட்புணர்வைப் படித்து விட்டு...
வேறு திசையாய் விரிந்து பிரிந்த
நண்பர்கள் புரட்டி விடு...

கை கோர்த்து நடைபயின்ற
நினைவலைகள் மீட்டி விட்டு...
அவள் விரல் பிரிந்த வேதனைகள்
தொடாமல் நகர்ந்து விடு...

உறவாக உணர்வாக
சொன்ன கதை படம் காட்டி...
ஊராகி போய் விட்ட
செய்தியினை மறைத்து விடு...

இணக்கமாய் இனிதே செல்லும்
ரயில் பயணம் ஓட்டி விட்டு...
பயணம் முழுதும் விலகி ஓடும்
தண்டவாளம் நிறுத்தி விடு...

என் மகள்

முழு மதியின் தாரகையோ
புவி முழுதின் தேவதையோ...

மழலை மொழி பிதற்றும்
தமிழ் மொழியின் காவியமோ...

செல்ல சினுங்கலிலே
மொட்டவிழ்க்கும் பூ மலரோ...

கோப தொனி தொடக்கும்
மை இமையின் கண்ணழகோ...

பச்சரிசி பல் வரிசை
பால் மணத்தின் சான்றிதழோ...

அலையலையாய் கூந்தல் கண்டே
கார் முகிலும் ஏங்கியதோ...

சப்பாணி கொட்டும் கைகள்
பட்டின் மென்மை போன்றதுவோ...

கிள்ளை மொழியின் குரலில்
குயிலின் கானம் தோற்றதுவோ...

என் முன் ஜென்ம
மா தவத்தின்
புண்ணியம்
நீ என் மகளோ....

அகங்காரம்

உன் மௌனத்தைக் கிழித்து
சடசடக்கத் துடிக்கும்
ஆவலை கொஞ்சம்
தலை தட்டினேன்....

மௌனத்தை மீறியே
பரவிடும் வெறுமையை
கையாழ்வதரியது
பதை பதைக்கிறேன்....

வெறுமையைத் தாண்டியும்
நெஞ்சினை நிரப்பிடும்
உன் நினைவுகள்
மறைப்பதென் அகங்காரமே....

'எனை மறந்தே போனாயோ ?'
என்கின்ற கேள்வியை
மறைப்பதற்கே இந்த
அகங்காரம் என்கின்ற அரிதாரமே...

கண்ணாடி மனம்



கலைந்தே பிரிந்திடினும்
கறையின்றி கலந்திடும்
மேகம் ஆகிப் போகாதோ
இந்த மனது...
சிறு உறசல்களிலேயே
கண்ணாடி சிதறல்களாய்...

அன்பு


கேட்டும் கிடைத்திடா அன்பும் 
கொடுத்ததும் புரியப்படா அன்பும் 
வெறுத்தும் திணிக்கப்படும் அன்பும் 
கொடுமையானது...
வெறுமையானது...

ஜனனி

 

எண்ணில் கணிதம் இணைகின்ற வினையில்
என்னவனின் இதயம் லயித்ததாலே
தமிழற்ற ஜ-கரம் முதலெழுத்தாக
ஜனித்து விட்டாள் 'ஜனனி' என் மகளாக....

கல்லூரி


சிலிர்த்திடும் கல்லூரி நாட்களை
சிந்தையில் சேமித்து
கிளறுகையில் சிக்கியதும்
சலித்ததில் மீந்ததும்
நீங்கள் தான்....!!!

மீண்டும்...




தாய்மையின் கிறக்கத்தில்
சற்றே ஓர் இடைவெளி....
இனி மீண்டும்
என் மௌனம்
மொழி பெயர்க்கப்படும்.....