தேர்தல்

இரங்கல் கூட்டத்தில்
அழுகை தான் அழகென்றால்
நானும் அழுகிறேன்...
இங்கே நேர்மை உண்மை நியாயம்
அத்தனையும் இறந்திருக்கிறதே
நான் ஒருத்தியேனும் அழுதாகத்தான் வேண்டும்....!!!

ரயிலும் நாமும்...

நம் உறவும்
ரயில்பெட்டிப் போல் தான்
நான் உன் புறம் நோக்கி...
நீ முன் புறம் நோக்கி...
ஆம்..! காதலைப் போல்
நட்பும் கொடியது தான்
ஒருவகையாய்
ஒருதலையாய்
ஆன பட்சத்தில்....

உணர்வுகள் மறந்தோம்...


சினம் விடுத்த வார்த்தைகள்
மனம் மறந்தப் பின்னும்
நம் நேசம் வளர்த்த உணர்வுகள்
ஏன் விலக்கிப் போனோம்...?

விட்டில் பூச்சிகள்

பளபளப்பாய் முகம் பிரதிபலித்தும்
துளி நீரற்று வரண்டுப் போன
காலிக் குடங்களும்....


தொடர்பு கொள்ள இணைப்பு இருந்தும்
இயக்கம் கொள்ள மின் அற்ற
தொலைக்காட்சிப் பெட்டியும்....


ஐந்தின் பின் இரு சுழி இருந்தும்
பருப்பின் முன் மதிப்பற்றுப் போன
காந்திக் காகிதமும்.....

வாக்காளனை நோக்கி
ஒருசேர உரக்க உரைத்தது
'விளக்கில் வீழும் விட்டில் பூச்சிகளா...' என்று

இங்கேயும் உண்டு...

கிழிந்தச் சட்டைகளும்
தொலைந்த ஒற்றைக் காலணியும் இருப்பது
கூடாரத்தில் மட்டுமல்ல
கோட்டையிலும் தான்...