உணர்வோமா...?!

புவி வாழும்
இறுதி மரத்தின்
ஒரே இலையும்
உதிரும் பொழுதேனும்
உணர்வோமா...?!
உயிர் வாழக்
காந்திக்காகிதம் மட்டுமே
போதாதென்பதை...

அதனால் என்ன...?!


உன் நேசம்
மரித்ததாய்
நீ உரைத்தப்
பொழுதிலும்
என் உதடுகள்
முனுமுனுத்ததென்னவோ

'அதனால் என்ன...?!
உனக்கும் சேர்த்து
நானே
நேசித்துவிட்டுப்
போகிறேன்....'

தெரிந்திருந்தால்...


அன்பு கொள்வதால்
இத்தனைத் துன்பமா?
தெரிந்திருந்தால்
ரௌத்திரமே பழகியிருப்பேன்....

கைக் கோர்க்கையில்...

உன் நட்பில் இணைவதாய் எண்ணி
கைக் கோர்த்திட முயன்றேன்...
விரல் வேர்ப்பதாய்க் கூறி
பிடி தளர்த்திச் சென்றாய்...
தேடல் தொடங்கிய நானே
தொலைந்தவளாகியும் போனேன்...

தோள் சாய்ந்திடு

என் உயிர்
உடல் பிரியும் வேளையில்
உன் விழி
நீர் சொரியும் நொடியினில்
என் தோள் மீது
உன் தலை சாய்த்திடு
அந்த கணத்திலேனும்
உன் தீண்டலும்...
என் தேடலும்...
நம் தோழமையும்...
முழுமைப் பெற்றதாய்
என் ஆன்மா சில்லிடட்டும்...