உள்ளம்

யாரும் வேண்டாமென்று
கதவடைத்துத் தனித்திருக்கச்
சென்ற போதும்,
உள்ளம் மட்டும்
உணர்வுகளால்
ஊர் கூட்டி
உட்கார்ந்து விட்டது...!

சுகம் தான்...


காதல் சுகம் தான்
காத்திருப்பதில் அல்ல...!
தேடல் சுகம் தான்
தேடித் தொலைவது அல்ல...!
காவியம் சுகம் தான்
கடைசியில் பிரிவதில் அல்ல...!
தீண்டல் சுகம் தான்
கற்பனை ஸ்பரிசங்கள் அல்ல...!
கனவு சுகம் தான்
உன் பிம்பம் இல்லாதது அல்ல...!
கண்ணீர் சுகம் தான்
உன் கண்ணில் இருப்பது அல்ல...!
பிரிவு சுகம் தான்
நிரந்தரம் அதுவெனில் அல்ல...!
நினைவு சுகம் தான்
அதுமட்டுமே நிஜமெனில் அல்ல...!
மௌனம் சுகம் தான்
புயலுக்கு முன்னது அல்ல...!
கோபம் சுகம் தான்
உள்ளத்தின் காயங்கள் அல்ல...!
புரிதல் சுகம் தான்
அதை உணர்த்திடும் தவிப்புகள் அல்ல...!
உரிமை சுகம் தான்
அதற்கு எல்லைகள் வகுப்பதில் அல்ல...!
உறவுகள் சுகம் தான்
அது உடைபடும் தருணங்கள் அல்ல...!

நேசம்

உரைக்காது உணராது
போவதும்
நேசம் என்றேன்
*
உரைக்காது ஆழ்நெஞ்ச
உணரலே
நேசம் என்றேன்
*
நெஞ்சத்தின் உணர்தலுக்காய்
உரைப்பதும்
நேசம் என்றேன்
*
உரைத்தபின் உணராததாய்
நடிப்பதும்
நேசம் என்றேன்
*
உரைப்பினும் உணரப்படாது
போவதும்
நேசம் என்றேன்
*
உரைத்தது துவேசமாய்
உணர்ந்திடினும்
அதுவும் நேசமே என்கிறேன்