புதிர்



ஏழு திங்கள்
மூடித் திளைத்த புதிர்
இன்னும் மூன்றே மாதத்தில்
முடிச்சவிழ்க்கும்
நீ
என் அவனா
என் அவளா
என்று....

அச்சம்


உன் பிரிவின்
கணம் தாக்கும்
துயர் கண்டு
அஞ்சவில்லையடி....
அத்துயரின்
வலி தாங்கும்
வல்லமைக் கிட்டிடுமோ
என்ற அச்சம் தான் 
எனக்கு...!

உணர்வுகள்

உன்னில் உணர்ச்சிகள்
நீர்த்துப் போகும் வேளையிலேனும்
நெஞ்சில் உணர்வுகள் மிளிர்ந்திட செய்...!
தத்தளித்திடும் சமயங்களில்
தாங்கிடும் உணர்வுகள் தேடி சலிக்கிறேன்

எதிர்மறை


உனக்கான கதவை
நீ திறந்த போது
எனக்கான சன்னலைச்
சாத்தி விட்டுப் போனாய்

சிரிப்பு


இப்பொழுதெல்லாம் சற்று
அதிகமாகவே அழுத்தமாகச்

சிரிக்கிறேன்...
அதில்
என் கண்ணீரின் பொருள்
மறைந்து மாறியது...!

எனது ஓட்டு

சிதைந்த முகம் போல்
என் நிழற்படம் பதித்த
அட்டை இருந்தும்...

இரு மூன்று முறை
நகம் பதித்து மறைந்த
கரு-மைக் கறை இருந்தும்...

மிக நீண்ட பட்டியலின்
ஒரு முனையினில் கூட
என் பெயர் காணாது போனது...!

நேர்மை தவறி
எவரிடம் செல்லுமோ
ஓர் ஆயிரம் ரூபாயும்
ஒரு பிரியாணிப் பொட்டலமும்
எனது ஓட்டும்...!

வெங்காயம்


பெரியாரின் எளிமைக் காட்டில்
இப்படி ஒரு விலை ஏற்றமா...?!

முன்னமே தெரிந்திருந்தால்
சிக்கனம் கருதி
சொல்லாமல் விட்டிருப்பார்
வெங்காயம்....!

பொறாமை

நம் விலகலின் சான்றிற்காய்
ஒரு துளி நீரேனும்
சொரிந்திருப்பாய்
நினைவலைகள் புரட்டியிருப்பாய்
சில பொழுது வெறித்திருப்பாய்
ஆயினும் அதனை
இயல்பாக ஏற்றிருப்பாய்...!
மாற்றத்தில் மருகாது
நயமாய் ஏற்றதடி உன் மனம்
சற்றே பொறாமை தான்
உன் மனம் மீது....!!!