ஆண்டு இறுதியில்

ஓர் ஆண்டின்
பயண கடைசியில்
மனம் மறக்க
ஒன்றிரண்டை விட்டுவிட்டும்
மகிழ்ந்திருக்க
சிலவற்றைச் சுமந்து கொண்டும்...
காலத்தைக் கடக்கிறோம்...!
நம் உறவின்
விரிசலைப் போலவும்...
மனதில்
உன் நினைவுகள் போலவும்...

என்ன கண்டாய்...?!



இதயங்கள் பிரிவதின்
வலிகள் உணர்ந்திருந்தும்
பிரிவினை அளிப்பதில்
சுகங்கள் என்ன கண்டாய்...?!

பழி தீர்த்தது

நான் தானே என்றும்...
அவள் தானே என்றும்...
நமக்குள் என்னவென்றும்...
காரணங்கள் கற்பித்து
தண்டனைத் தப்பிய
தவறுகள் அனைத்தும்...
ஒன்று கூடி
ஓர் நாள் கர்ஜித்தது...!
.
கைவசம் கேடயமின்றி
சரணடைந்தேன்...!
.
செய்த பாவம்
பாவம் பாராது
பழி தீர்த்தது...!
.
குடியுரிமை பறிக்கப்பட்டும்
குடியானவள் போல்
நான்...!

கர்வமே மிஞ்சியது

எதையும்
எதிர் பாரா நட்பில்
நேசம்
எதிர் நோக்கிய பிழை...
இதோ
உன் பொருட்டு
என் நேசம் முழுமை
என்ற கர்வம் மட்டுமே
மிஞ்சியது...!!!

மீட்பு

தொலைந்த
என் தனிமையைத் தேடி
வெறுமையை
மீட்டெடுத்தேன்....
தேங்கி நின்ற
நினைவுகளோடு
அதுவும் சேர்ந்து கொண்டது....
மீட்டப்படாத
இசையைப் போல்...!

பயணம்


உன் குரலின் இனிதைத் தேடி
துவங்கிய என் பயணம்
நம் வாக்குவாதப் புதையலில் போய்
முட்டி மூழ்கியது...!

கரிசனம்

விதிக்குத் தான்
எத்தனைக் கரிசனம்...
உன்னைப் பிரித்த பின்பும்
உன் நினைவுகளை இன்னமும்
விட்டுவைத்திருக்கிறது....!

உள்ளம்

யாரும் வேண்டாமென்று
கதவடைத்துத் தனித்திருக்கச்
சென்ற போதும்,
உள்ளம் மட்டும்
உணர்வுகளால்
ஊர் கூட்டி
உட்கார்ந்து விட்டது...!

சுகம் தான்...


காதல் சுகம் தான்
காத்திருப்பதில் அல்ல...!
தேடல் சுகம் தான்
தேடித் தொலைவது அல்ல...!
காவியம் சுகம் தான்
கடைசியில் பிரிவதில் அல்ல...!
தீண்டல் சுகம் தான்
கற்பனை ஸ்பரிசங்கள் அல்ல...!
கனவு சுகம் தான்
உன் பிம்பம் இல்லாதது அல்ல...!
கண்ணீர் சுகம் தான்
உன் கண்ணில் இருப்பது அல்ல...!
பிரிவு சுகம் தான்
நிரந்தரம் அதுவெனில் அல்ல...!
நினைவு சுகம் தான்
அதுமட்டுமே நிஜமெனில் அல்ல...!
மௌனம் சுகம் தான்
புயலுக்கு முன்னது அல்ல...!
கோபம் சுகம் தான்
உள்ளத்தின் காயங்கள் அல்ல...!
புரிதல் சுகம் தான்
அதை உணர்த்திடும் தவிப்புகள் அல்ல...!
உரிமை சுகம் தான்
அதற்கு எல்லைகள் வகுப்பதில் அல்ல...!
உறவுகள் சுகம் தான்
அது உடைபடும் தருணங்கள் அல்ல...!

நேசம்

உரைக்காது உணராது
போவதும்
நேசம் என்றேன்
*
உரைக்காது ஆழ்நெஞ்ச
உணரலே
நேசம் என்றேன்
*
நெஞ்சத்தின் உணர்தலுக்காய்
உரைப்பதும்
நேசம் என்றேன்
*
உரைத்தபின் உணராததாய்
நடிப்பதும்
நேசம் என்றேன்
*
உரைப்பினும் உணரப்படாது
போவதும்
நேசம் என்றேன்
*
உரைத்தது துவேசமாய்
உணர்ந்திடினும்
அதுவும் நேசமே என்கிறேன்

தமிழ்த் தாய்

அழகாக அணிகலன்கள் அணிந்தாய் ஐந்து
பைந்தமிழ் கவிஞர்கள் எண்ணங்கள் புனைந்து
காலங்கள் கடந்துவிட்ட கோலங்கள் அறிவாயோ...?!
உலகம் தான் அடைந்துவிட்ட மாற்றங்கள் அறிவாயோ...?!
*
நீ தவழுதலைத் தடுக்குமென்றால்
காற் சிலம்பும் எதற்கு..?
*
உன் கைவீச்சைப் பழிக்குமென்றால்
வளையல் தான் எதற்கு..?
*
நிமிர்ந்த நடையை முடக்குமென்றால்
இடை அணியும் எதற்கு..?
*
செவிக்கூர்மையைச் சாய்க்குமென்றால்
குண்டலமும் எதற்கு..?
*
தலை கொண்ட மகுடத்தால்
வலிகள் தான் பெருகுமென்றால்
மணி கொண்டே வலி தரும்
மகுடம் தான் எதற்கு..?
*
மீண்டும் ஒரு முறை
வறுமை கோலம் பூண்டுகொள்
உன் மைந்தன் உன்னை மீட்க
போர் கோலம் பூணுவான்...!
*
பேனா கைக் கொண்டு
போரிட்டு வென்றிடுவான்...!
ஐந்தென்ன பத்து இலக்கியம்
அணிகலனாய்ப் படைத்திடுவான்...!

?!?!?!?!?!


வேலி நிலம் பறித்தபோது
விலகி நின்றான்

அய்யோ பாவம் என்றோம்...

கூரை வீட்டைக் கலைத்தபோது
கலங்கி நின்றான்
அவனைக் கோழை என்றோம்...

கொண்டவள் கற்பைச் சிதைத்தபோது
கொதித்து நின்றான்
இன்னும் இல்லையா கோபம் என்றோம்...

இத்தனைப் பட்ட பின்,
வீறு கொண்டு
வில்லேந்தி வந்தான்
அவனையே மாவோயிஸ்ட் என்கிறோம்...?!

நேசம்

அவளை நேசித்துப் பார்த்தேன்
வானம் வசப்பட்டது...
அவள் நேசத்தை எதிர்பார்த்தேன்
உலகம் நழுவிச் சென்றது...!!!

கண் சிமிட்டி


கண் சிமிட்டும்
விண்மீன்களுக்கு இடையே
தானும் கொஞ்சம்
கண் சிமிட்டிப் பார்த்தது
இரவு நேரத்தில் வானூர்தி...!

முரண்

சமயத்தில் நினைக்கையில்
ரணமாகிப் போனது மனசு...
மனசே நடிக்கையில்
என்னதான் செய்யும் என் உசிரு...
*
உன் கடலின் இரைச்சலில்
செவிடாகிப்போனது
என் செவியோ...?
ஆழ் கடலின் மொழி போல்
மௌனித்திருப்பதே
என் நிலையோ...?!
*
புவி நோக்கும் மழையாய்
உன்னில் பாய்வதால்
எனக்கென்ன லாபம்...?
நிலம் புகும் நீர் போல்
உன்னில்தொலைவதற்கு
எதற்கிந்த வேகம்...?!
*
அன்பு ஊற்றையும்
விழுங்கி அமிழ்க்க
நீ கடும் பாலையோ...?
உன்னில் கானல் நீராயினும்
வெளிப்பட எத்தனிப்பதே
என் வேலையோ...?!

இரங்கற்பா


நீ...
உன் மௌனம் கலைத்து
ஒரு வரி மொழிந்தாய்...
அதில்,
என் கவிதையின்
அத்தனை வரிகளும்
பொருள் பிரண்டு
என் உணர்வுகளுக்கே
இரங்கற்பா ஆனது...!!!

இதயம்


என் இதயம் துடித்திடவும் இல்லை...
அதுவே மரித்திடவும் இல்லை...
அந்த சில கணப் பொழுதினில்
மரிப்பதற்காகத் துடித்தது....!!!

திண்ணை


வழிப்போக்கனை வரவேற்கும்
திண்ணைகள்
காலப்போக்கில் சுருங்கி
வரவேற்பறையின்
பூட்டாய் ஆனது...!

உணர்ந்ததும் உரைத்ததும்

என் தேடல்கள் --- வேவுகள்
என் நேசங்கள் --- வேஷங்கள்
உன் பாசங்கள் --- கோபங்கள்
நம் உறவுகள் --- மனவலிகள்
வரிகளின் முற்பாதி
நான் உணர்ந்தவை....!!!
அவற்றின் பிற்பாதி
நீ உரைத்தவை....!!!

மே 2009

விடியல் வேண்டி
வன்னி கதறியபோது
கிழக்கு மட்டும்
கொஞ்சம் சிவந்தது...!
அதைக் காண உயிர்கள்
கொஞ்சமும் இலாது...!
வானமும் வெளுத்தது
வெட்கம் இலாது...!
*
மரித்துப் போன மனிதரும்
மாண்டு விட்ட நேயமும்
மகுடி வாசித்த சுற்றமும்
மறுத்தளித்த தாய் இனமும்
கொட்டிக் கொடுத்தன காரணங்கள்...
சோகத்தில் வடிக்கக் காவியங்கள்...!!!
*
இரங்கல் கூட்டம் தொடுக்க
மிச்சம் இல்லா மனிதம்...
இறந்தோர் எண்ணிக்கை எடுக்க
தைரியம் இல்லா இதயம்...
*
தேவனின் தீர்ப்பிற்காக
இன்னும் எத்தனை எழுதுகோலின்
முனையைத் தான் உடைக்க...?????
*
உலகம் விழிக்க
இதோ உரக்க உரைக்கிறேன்
ஒரு வரி....
*
ஓர் இனத்தின் சவக்குவியல் மேல்
சம்மணமிட்டுக் கவிதை கிறுக்குகிறேன்...!!!!

தவறால்....

தவறாய்ப் போன கவிதையினால்
கசங்கிப் போன காகிதம் போல்
தவறுதலாய் உணர்த்தப்பட்டக் காரணத்தினால்
குப்பையாய் ஒதுக்கப்பட்டது என் நேசமும்...!!!

கரைந்திடும்...


கண்ணெதிரே கரைந்திடினும்
தடுத்தாள இயலாத
கடற்கரை மணற்பரப்பின்
கிறுக்கல்கள் போல்
கண்முன்னே கரைகிறது
நாம் வடித்த
நம் உறவும் உணர்வும்

என்னவென்பது...

விடாது என்னை நீ
தழுவிச் செல்வதால்
உன்னை நான்
நேசம் என்பதா....???
உன் காதலுக்காய்
என்னை நீ
பிரிந்துச் செல்வதால்
உனையே நட்பு என்பதா....???

துணை


தோழமையும்
தோள் திணவும்
விட்டுச் சென்ற போதும்
என் தனிமை
எனக்கென்று
துணைக்கிருக்கையில்
நான் தனித்திருப்பதாய்க் கூறி
உன்னைத் துணைக்கழைத்தது யார்....????

சாளர இருக்கை


நிதானமாய் ஏறிய பேருந்திலும்
பரபரப்பாய் கண்கள் தேடிய
சாளர இருக்கை
நக்கலாய் நகைத்தபடி
கேட்டது
' அகவையின் முதிர்விலும்
உன் குழந்தைத்தனத்தை
எங்கென்று மறைத்து வைத்தாய்...? '

வாசமாய்...


தனித்திருப்பதாய் நினைத்திருக்கும்
சில பொழுதுகளில்
உன் வருகையை எண்ணி
சிலாகித்திருக்கிறேன்
மழைச் சாரலுடன்
பூச்சரம் என்றாக இல்லை
தினம் புலரும் பொழுதுகளுடன்
குழம்பியின் வாசமாய்....

பிழை யாருடையது...?!


பிரிவினைக்கு ஏதுவாய்
நிறம் உருவம் மாற்றிப் படைத்த
இறைவனின் பழியைப் பழிக்க
ஆகாயம் நோக்கினேன்...
மேகம் வெவ்வேறாயினும்
ஒரே சுவையினதாய் விழுந்த
மழையின் வழியாய்
பதில் உரைத்தான்
பிழை யாருடையதென....!!!

காட்டிக் கொடுத்தது


பல பிறைகள் கண்டு கடந்தும்
மனத் திரையில் மறைந்து வளர்ந்ததை
இரு திங்கள் காட்டிக் கொடுத்து...
அது
உன் மீது எந்தன் நேசம்...!!!

கனவு...!!!


ஆழ் மனதின் விழிப்பில் பிறந்து
இறுகிய விழிகளில் நிறைந்து
நினைவுகளின் முடிச்சுகளில் மாட்டாமல்
இரவின் இருளிலும்
மனதின் உறக்கத்திலும்
கரைந்தே தொலைந்துப் போனது
என் கனவு...!!!

மாற்றம் இல்லை


இட்ட ஒரே வாரத்தில்
உருமாறி குழி விழுந்த
சாலை...!

நொடி பொழுதில் முன்சென்றோ
மணி கணக்கில் தாமதித்தோ வரும்
பேருந்து...!

நாம் தாமதிக்கும் நாள் மட்டும்
முன்னே வந்து கண்காணிக்கும்
மேற்பார்வையாளர்...!

மாதத்தின் முதல் நாள் மட்டும்
உபச்சாரத்துடன் முகம் மலரும்
குடும்பம்...!

நாள்தோறும் மாறும் தேதிகளன்றி
வேறெதுவும் மாறவில்லை
சென்ற ஆண்டும்...!

நானாக


உன்னால் மாறியதாய்
நான் முனுமுனுத்தே இருப்பினும்
நான் நானாக
உன் நிழலின் பக்கம்

கரை(கறை) நல்லது


பட்டு வேட்டி
கொடுக்காத செல்வத்தைக்
கட்சி கரை வேட்டி
அளித்த போது எண்ணினேன்
கரை (கறை) நல்லது...!