திண்ணை


வழிப்போக்கனை வரவேற்கும்
திண்ணைகள்
காலப்போக்கில் சுருங்கி
வரவேற்பறையின்
பூட்டாய் ஆனது...!

உணர்ந்ததும் உரைத்ததும்

என் தேடல்கள் --- வேவுகள்
என் நேசங்கள் --- வேஷங்கள்
உன் பாசங்கள் --- கோபங்கள்
நம் உறவுகள் --- மனவலிகள்
வரிகளின் முற்பாதி
நான் உணர்ந்தவை....!!!
அவற்றின் பிற்பாதி
நீ உரைத்தவை....!!!

மே 2009

விடியல் வேண்டி
வன்னி கதறியபோது
கிழக்கு மட்டும்
கொஞ்சம் சிவந்தது...!
அதைக் காண உயிர்கள்
கொஞ்சமும் இலாது...!
வானமும் வெளுத்தது
வெட்கம் இலாது...!
*
மரித்துப் போன மனிதரும்
மாண்டு விட்ட நேயமும்
மகுடி வாசித்த சுற்றமும்
மறுத்தளித்த தாய் இனமும்
கொட்டிக் கொடுத்தன காரணங்கள்...
சோகத்தில் வடிக்கக் காவியங்கள்...!!!
*
இரங்கல் கூட்டம் தொடுக்க
மிச்சம் இல்லா மனிதம்...
இறந்தோர் எண்ணிக்கை எடுக்க
தைரியம் இல்லா இதயம்...
*
தேவனின் தீர்ப்பிற்காக
இன்னும் எத்தனை எழுதுகோலின்
முனையைத் தான் உடைக்க...?????
*
உலகம் விழிக்க
இதோ உரக்க உரைக்கிறேன்
ஒரு வரி....
*
ஓர் இனத்தின் சவக்குவியல் மேல்
சம்மணமிட்டுக் கவிதை கிறுக்குகிறேன்...!!!!

தவறால்....

தவறாய்ப் போன கவிதையினால்
கசங்கிப் போன காகிதம் போல்
தவறுதலாய் உணர்த்தப்பட்டக் காரணத்தினால்
குப்பையாய் ஒதுக்கப்பட்டது என் நேசமும்...!!!

கரைந்திடும்...


கண்ணெதிரே கரைந்திடினும்
தடுத்தாள இயலாத
கடற்கரை மணற்பரப்பின்
கிறுக்கல்கள் போல்
கண்முன்னே கரைகிறது
நாம் வடித்த
நம் உறவும் உணர்வும்