தமிழ்த் தாய்

அழகாக அணிகலன்கள் அணிந்தாய் ஐந்து
பைந்தமிழ் கவிஞர்கள் எண்ணங்கள் புனைந்து
காலங்கள் கடந்துவிட்ட கோலங்கள் அறிவாயோ...?!
உலகம் தான் அடைந்துவிட்ட மாற்றங்கள் அறிவாயோ...?!
*
நீ தவழுதலைத் தடுக்குமென்றால்
காற் சிலம்பும் எதற்கு..?
*
உன் கைவீச்சைப் பழிக்குமென்றால்
வளையல் தான் எதற்கு..?
*
நிமிர்ந்த நடையை முடக்குமென்றால்
இடை அணியும் எதற்கு..?
*
செவிக்கூர்மையைச் சாய்க்குமென்றால்
குண்டலமும் எதற்கு..?
*
தலை கொண்ட மகுடத்தால்
வலிகள் தான் பெருகுமென்றால்
மணி கொண்டே வலி தரும்
மகுடம் தான் எதற்கு..?
*
மீண்டும் ஒரு முறை
வறுமை கோலம் பூண்டுகொள்
உன் மைந்தன் உன்னை மீட்க
போர் கோலம் பூணுவான்...!
*
பேனா கைக் கொண்டு
போரிட்டு வென்றிடுவான்...!
ஐந்தென்ன பத்து இலக்கியம்
அணிகலனாய்ப் படைத்திடுவான்...!

?!?!?!?!?!


வேலி நிலம் பறித்தபோது
விலகி நின்றான்

அய்யோ பாவம் என்றோம்...

கூரை வீட்டைக் கலைத்தபோது
கலங்கி நின்றான்
அவனைக் கோழை என்றோம்...

கொண்டவள் கற்பைச் சிதைத்தபோது
கொதித்து நின்றான்
இன்னும் இல்லையா கோபம் என்றோம்...

இத்தனைப் பட்ட பின்,
வீறு கொண்டு
வில்லேந்தி வந்தான்
அவனையே மாவோயிஸ்ட் என்கிறோம்...?!

நேசம்

அவளை நேசித்துப் பார்த்தேன்
வானம் வசப்பட்டது...
அவள் நேசத்தை எதிர்பார்த்தேன்
உலகம் நழுவிச் சென்றது...!!!

கண் சிமிட்டி


கண் சிமிட்டும்
விண்மீன்களுக்கு இடையே
தானும் கொஞ்சம்
கண் சிமிட்டிப் பார்த்தது
இரவு நேரத்தில் வானூர்தி...!

முரண்

சமயத்தில் நினைக்கையில்
ரணமாகிப் போனது மனசு...
மனசே நடிக்கையில்
என்னதான் செய்யும் என் உசிரு...
*
உன் கடலின் இரைச்சலில்
செவிடாகிப்போனது
என் செவியோ...?
ஆழ் கடலின் மொழி போல்
மௌனித்திருப்பதே
என் நிலையோ...?!
*
புவி நோக்கும் மழையாய்
உன்னில் பாய்வதால்
எனக்கென்ன லாபம்...?
நிலம் புகும் நீர் போல்
உன்னில்தொலைவதற்கு
எதற்கிந்த வேகம்...?!
*
அன்பு ஊற்றையும்
விழுங்கி அமிழ்க்க
நீ கடும் பாலையோ...?
உன்னில் கானல் நீராயினும்
வெளிப்பட எத்தனிப்பதே
என் வேலையோ...?!

இரங்கற்பா


நீ...
உன் மௌனம் கலைத்து
ஒரு வரி மொழிந்தாய்...
அதில்,
என் கவிதையின்
அத்தனை வரிகளும்
பொருள் பிரண்டு
என் உணர்வுகளுக்கே
இரங்கற்பா ஆனது...!!!

இதயம்


என் இதயம் துடித்திடவும் இல்லை...
அதுவே மரித்திடவும் இல்லை...
அந்த சில கணப் பொழுதினில்
மரிப்பதற்காகத் துடித்தது....!!!