சாளர இருக்கை


நிதானமாய் ஏறிய பேருந்திலும்
பரபரப்பாய் கண்கள் தேடிய
சாளர இருக்கை
நக்கலாய் நகைத்தபடி
கேட்டது
' அகவையின் முதிர்விலும்
உன் குழந்தைத்தனத்தை
எங்கென்று மறைத்து வைத்தாய்...? '

வாசமாய்...


தனித்திருப்பதாய் நினைத்திருக்கும்
சில பொழுதுகளில்
உன் வருகையை எண்ணி
சிலாகித்திருக்கிறேன்
மழைச் சாரலுடன்
பூச்சரம் என்றாக இல்லை
தினம் புலரும் பொழுதுகளுடன்
குழம்பியின் வாசமாய்....

பிழை யாருடையது...?!


பிரிவினைக்கு ஏதுவாய்
நிறம் உருவம் மாற்றிப் படைத்த
இறைவனின் பழியைப் பழிக்க
ஆகாயம் நோக்கினேன்...
மேகம் வெவ்வேறாயினும்
ஒரே சுவையினதாய் விழுந்த
மழையின் வழியாய்
பதில் உரைத்தான்
பிழை யாருடையதென....!!!

காட்டிக் கொடுத்தது


பல பிறைகள் கண்டு கடந்தும்
மனத் திரையில் மறைந்து வளர்ந்ததை
இரு திங்கள் காட்டிக் கொடுத்து...
அது
உன் மீது எந்தன் நேசம்...!!!