தமிழ்த் தாய்

அழகாக அணிகலன்கள் அணிந்தாய் ஐந்து
பைந்தமிழ் கவிஞர்கள் எண்ணங்கள் புனைந்து
காலங்கள் கடந்துவிட்ட கோலங்கள் அறிவாயோ...?!
உலகம் தான் அடைந்துவிட்ட மாற்றங்கள் அறிவாயோ...?!
*
நீ தவழுதலைத் தடுக்குமென்றால்
காற் சிலம்பும் எதற்கு..?
*
உன் கைவீச்சைப் பழிக்குமென்றால்
வளையல் தான் எதற்கு..?
*
நிமிர்ந்த நடையை முடக்குமென்றால்
இடை அணியும் எதற்கு..?
*
செவிக்கூர்மையைச் சாய்க்குமென்றால்
குண்டலமும் எதற்கு..?
*
தலை கொண்ட மகுடத்தால்
வலிகள் தான் பெருகுமென்றால்
மணி கொண்டே வலி தரும்
மகுடம் தான் எதற்கு..?
*
மீண்டும் ஒரு முறை
வறுமை கோலம் பூண்டுகொள்
உன் மைந்தன் உன்னை மீட்க
போர் கோலம் பூணுவான்...!
*
பேனா கைக் கொண்டு
போரிட்டு வென்றிடுவான்...!
ஐந்தென்ன பத்து இலக்கியம்
அணிகலனாய்ப் படைத்திடுவான்...!

0 comments:

Post a Comment