காட்டிக் கொடுத்தது


பல பிறைகள் கண்டு கடந்தும்
மனத் திரையில் மறைந்து வளர்ந்ததை
இரு திங்கள் காட்டிக் கொடுத்து...
அது
உன் மீது எந்தன் நேசம்...!!!

கனவு...!!!


ஆழ் மனதின் விழிப்பில் பிறந்து
இறுகிய விழிகளில் நிறைந்து
நினைவுகளின் முடிச்சுகளில் மாட்டாமல்
இரவின் இருளிலும்
மனதின் உறக்கத்திலும்
கரைந்தே தொலைந்துப் போனது
என் கனவு...!!!

மாற்றம் இல்லை


இட்ட ஒரே வாரத்தில்
உருமாறி குழி விழுந்த
சாலை...!

நொடி பொழுதில் முன்சென்றோ
மணி கணக்கில் தாமதித்தோ வரும்
பேருந்து...!

நாம் தாமதிக்கும் நாள் மட்டும்
முன்னே வந்து கண்காணிக்கும்
மேற்பார்வையாளர்...!

மாதத்தின் முதல் நாள் மட்டும்
உபச்சாரத்துடன் முகம் மலரும்
குடும்பம்...!

நாள்தோறும் மாறும் தேதிகளன்றி
வேறெதுவும் மாறவில்லை
சென்ற ஆண்டும்...!

நானாக


உன்னால் மாறியதாய்
நான் முனுமுனுத்தே இருப்பினும்
நான் நானாக
உன் நிழலின் பக்கம்

கரை(கறை) நல்லது


பட்டு வேட்டி
கொடுக்காத செல்வத்தைக்
கட்சி கரை வேட்டி
அளித்த போது எண்ணினேன்
கரை (கறை) நல்லது...!