மழையோடு...

தூரத்து மழைத் துளியின் 
சந்தோஷ தூத்தல்கள்...
அதை ஏந்தும் எண்ணத்தில் 
மண் சொட்டும் வாசங்கள்... 
இமை மூடி எனைத் தழுவும் 
பனி காற்றின் ஜாலங்கள்... 
இரவோடு இரகசியமாய் 
நெஞ்சத்தின் பேத்தல்கள்... 

கனவு !




இமை இடுக்கில் 
இடைபடும் கண்ணில் 
கனியாத கலையாத 
கசிந்தோடும் கனவு !

பிறை நிலா முகம் !

மச்சி மதில்களில்
எட்டி உதித்திடும்
பிறை நிலா முகம்

மின்னித் தெறித்திட
என்னைத் தேடிடும்
மையிரு விழி

கண்ட நொடியினில்
வில்லென வளைந்திடும்
புன்னகை இதழ்

எட்டா தொலைவினை
தவழ்ந்தே சேர்ந்திடும்
முத்தத் துளி

சத்தம் இல்லாமல்
கைகள் ஆடிடும்
Zib zab zoom

நிச்சய வருகைகாய்
சத்தியம் கேட்டிடும்
உள்ளங்கனி

கடந்த பின்னரும்
எந்தன் மனதினுள்
அந்த சில நொடி

மழைத் துளி !

மழைத் துளி !
என் கண்ணீரைத் தேக்கி மறைத்த
கண்களின் கடவு சொல் !

எங்கே சென்றாய்...

எங்கே சென்றாய் பெண்ணே...
என் தனிமைகளையும்
உன்னோடு மூட்டைக் கட்டிக் கொண்டு
எங்கே சென்றாய்...
உன்னை அழைத்தும்...
அலைந்தும்..,
கரைகிறேன்..
கரை சேர்க்க இல்லது போனாலும்
ஒரு முறை என்னூடே
நீந்தி போ...

தவம்

இலை உதிர்வதாலே
கிளை மடிவதில்லை...
மழைத் துளியின்
ஈரம் வரும் வரை
தவம் முடிவதில்லை...

கண்ணத்தில் முத்தமிட்டால் + பொன்னியின் செல்வன்

(கண்ணத்தில் முத்தமிட்டால் படமும் பொன்னியின் செல்வனும் ஒரே நேரத்தில் என்னை சந்தித்ததின் விளைவு கீழே)

மறத்தினில் அறம் கொண்டு
பள்ளிப்படை ஏன் சென்றாய்
ஏலேல சிங்கா...

போரினில் விலக்கமைத்துப்
பகைகுடி ஏன் காத்தாய்
ராஜ ராஜா...

கருவறுப்பான் என அறிந்திருந்தால்
உறவருத்திருப்பீரோ
பாண்டிய மன்னா....

பிற்காலம் நடப்பதை அக்காலம் அறிந்தாரில்லை...

ஓ இனங்களே...
பிற்காலம் நடப்பதை இக்காலமும் அறிந்தாரில்லை !!!

முடவன் நான்...!


கடலில் நீந்தியே
கரையைத் தேடும்
முடவன் போல்
நான் உன்னைத் தேடினேன்...
புயலாய் நீ என்னைப்
புரட்டியே போட்டிடினும்
இழந்துப் போக
கட்டுமரம் கூட இல்லை என்னிடம்...

மௌனம்



மடல் விரியும் சத்தம் கூட
உரக்க கேட்கும் தருணம்
அமைதி என்றும் கூறலாம்
அதுவே
மௌனம் என்றும் ஆகலாம்...

சிந்தனை




மென்று தின்று முடிக்கும் மணித்துளிக்குள்
அசை போட்டது மனது
சில பல வருடங்களையும்
ஒரு சில உணர்வுகளையும்...

கனவுடன் ஒரு உடன்படிக்கை

கண்ணுக்குத் தெரியாமல்
கள்ளனாய் உறவாடி...

நெஞ்சத்தின் நினைவுகள்
அறியாது களவாடி...

சிந்தையின் சிதறலாய்
சில பொழுதே வந்தோடும்
கனவே...

உன்னோடு சின்னதாய் ஓர் உடன்படிக்கை...
கையேடு ஏதுமில்லா ஒரு கனவு அறிக்கை...

எங்கேயும் திருடாமல்
எல்லைகள் மீறாமல்
விரல்கள் நீட்டிடினும்
மூக்கின் நுனி உரசாமல்...

உள்ளத்தின் உணர்வுகள் பகிர்கிறேன்...
என்னோடு உறவாட உன்னை விழிக்கிறேன்...

பள்ளியறை பாடம் தாண்டி
மரத்தடியை வருடி விட்டு....
இறுதி முகம் பார்த்த அந்த
கணக்குப் பரீட்சை மறைத்துவிடு...

நேசமுகம் காட்டும் அந்த
குட்டி சண்டை காட்டி விட்டு...
எங்கேயேனும் காண ஏங்கும்
ஏக்கங்கள் தவிர்த்து விடு....

கல்லூரி சாலை நிறையும்
பூவிதழ்கள் நுகர்ந்து விட்டு...
பாதங்கள் பட்டு வந்த
சுவடுகள் அழித்து விடு...

கூடி பேசி சிரித்து சிலிர்த்த
நட்புணர்வைப் படித்து விட்டு...
வேறு திசையாய் விரிந்து பிரிந்த
நண்பர்கள் புரட்டி விடு...

கை கோர்த்து நடைபயின்ற
நினைவலைகள் மீட்டி விட்டு...
அவள் விரல் பிரிந்த வேதனைகள்
தொடாமல் நகர்ந்து விடு...

உறவாக உணர்வாக
சொன்ன கதை படம் காட்டி...
ஊராகி போய் விட்ட
செய்தியினை மறைத்து விடு...

இணக்கமாய் இனிதே செல்லும்
ரயில் பயணம் ஓட்டி விட்டு...
பயணம் முழுதும் விலகி ஓடும்
தண்டவாளம் நிறுத்தி விடு...

என் மகள்

முழு மதியின் தாரகையோ
புவி முழுதின் தேவதையோ...

மழலை மொழி பிதற்றும்
தமிழ் மொழியின் காவியமோ...

செல்ல சினுங்கலிலே
மொட்டவிழ்க்கும் பூ மலரோ...

கோப தொனி தொடக்கும்
மை இமையின் கண்ணழகோ...

பச்சரிசி பல் வரிசை
பால் மணத்தின் சான்றிதழோ...

அலையலையாய் கூந்தல் கண்டே
கார் முகிலும் ஏங்கியதோ...

சப்பாணி கொட்டும் கைகள்
பட்டின் மென்மை போன்றதுவோ...

கிள்ளை மொழியின் குரலில்
குயிலின் கானம் தோற்றதுவோ...

என் முன் ஜென்ம
மா தவத்தின்
புண்ணியம்
நீ என் மகளோ....

அகங்காரம்

உன் மௌனத்தைக் கிழித்து
சடசடக்கத் துடிக்கும்
ஆவலை கொஞ்சம்
தலை தட்டினேன்....

மௌனத்தை மீறியே
பரவிடும் வெறுமையை
கையாழ்வதரியது
பதை பதைக்கிறேன்....

வெறுமையைத் தாண்டியும்
நெஞ்சினை நிரப்பிடும்
உன் நினைவுகள்
மறைப்பதென் அகங்காரமே....

'எனை மறந்தே போனாயோ ?'
என்கின்ற கேள்வியை
மறைப்பதற்கே இந்த
அகங்காரம் என்கின்ற அரிதாரமே...

கண்ணாடி மனம்



கலைந்தே பிரிந்திடினும்
கறையின்றி கலந்திடும்
மேகம் ஆகிப் போகாதோ
இந்த மனது...
சிறு உறசல்களிலேயே
கண்ணாடி சிதறல்களாய்...

அன்பு


கேட்டும் கிடைத்திடா அன்பும் 
கொடுத்ததும் புரியப்படா அன்பும் 
வெறுத்தும் திணிக்கப்படும் அன்பும் 
கொடுமையானது...
வெறுமையானது...

ஜனனி

 

எண்ணில் கணிதம் இணைகின்ற வினையில்
என்னவனின் இதயம் லயித்ததாலே
தமிழற்ற ஜ-கரம் முதலெழுத்தாக
ஜனித்து விட்டாள் 'ஜனனி' என் மகளாக....

கல்லூரி


சிலிர்த்திடும் கல்லூரி நாட்களை
சிந்தையில் சேமித்து
கிளறுகையில் சிக்கியதும்
சலித்ததில் மீந்ததும்
நீங்கள் தான்....!!!

மீண்டும்...




தாய்மையின் கிறக்கத்தில்
சற்றே ஓர் இடைவெளி....
இனி மீண்டும்
என் மௌனம்
மொழி பெயர்க்கப்படும்.....

புதிர்



ஏழு திங்கள்
மூடித் திளைத்த புதிர்
இன்னும் மூன்றே மாதத்தில்
முடிச்சவிழ்க்கும்
நீ
என் அவனா
என் அவளா
என்று....

அச்சம்


உன் பிரிவின்
கணம் தாக்கும்
துயர் கண்டு
அஞ்சவில்லையடி....
அத்துயரின்
வலி தாங்கும்
வல்லமைக் கிட்டிடுமோ
என்ற அச்சம் தான் 
எனக்கு...!