கனவுடன் ஒரு உடன்படிக்கை

கண்ணுக்குத் தெரியாமல்
கள்ளனாய் உறவாடி...

நெஞ்சத்தின் நினைவுகள்
அறியாது களவாடி...

சிந்தையின் சிதறலாய்
சில பொழுதே வந்தோடும்
கனவே...

உன்னோடு சின்னதாய் ஓர் உடன்படிக்கை...
கையேடு ஏதுமில்லா ஒரு கனவு அறிக்கை...

எங்கேயும் திருடாமல்
எல்லைகள் மீறாமல்
விரல்கள் நீட்டிடினும்
மூக்கின் நுனி உரசாமல்...

உள்ளத்தின் உணர்வுகள் பகிர்கிறேன்...
என்னோடு உறவாட உன்னை விழிக்கிறேன்...

பள்ளியறை பாடம் தாண்டி
மரத்தடியை வருடி விட்டு....
இறுதி முகம் பார்த்த அந்த
கணக்குப் பரீட்சை மறைத்துவிடு...

நேசமுகம் காட்டும் அந்த
குட்டி சண்டை காட்டி விட்டு...
எங்கேயேனும் காண ஏங்கும்
ஏக்கங்கள் தவிர்த்து விடு....

கல்லூரி சாலை நிறையும்
பூவிதழ்கள் நுகர்ந்து விட்டு...
பாதங்கள் பட்டு வந்த
சுவடுகள் அழித்து விடு...

கூடி பேசி சிரித்து சிலிர்த்த
நட்புணர்வைப் படித்து விட்டு...
வேறு திசையாய் விரிந்து பிரிந்த
நண்பர்கள் புரட்டி விடு...

கை கோர்த்து நடைபயின்ற
நினைவலைகள் மீட்டி விட்டு...
அவள் விரல் பிரிந்த வேதனைகள்
தொடாமல் நகர்ந்து விடு...

உறவாக உணர்வாக
சொன்ன கதை படம் காட்டி...
ஊராகி போய் விட்ட
செய்தியினை மறைத்து விடு...

இணக்கமாய் இனிதே செல்லும்
ரயில் பயணம் ஓட்டி விட்டு...
பயணம் முழுதும் விலகி ஓடும்
தண்டவாளம் நிறுத்தி விடு...

0 comments:

Post a Comment